
இந்திய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதாகும் முரளி கார்த்திக். சென்னையைச் சேர்ந்தவர். 8 டெஸ்ட் போட்டிகளிலும், 37 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டைத் துவங்கிய இவர் 203 போட்டிகளில் 4,423 ரன்களை எடுத்துள்ளார், இதில் 21 அரைசதங்கள். மேலும் 644 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சோமர்செட், சர்ரே, லங்காஷயர், மிடில்செக்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா, புனே வாரியர்ஸ், பெங்களூரு ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார்.
ரஞ்சி போட்டிகளில் அவர் ரயில்வே அணிக்காக விளையாடி வந்தார்.
அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்திய அணியில் உச்சத்தில் இருந்தபோது இவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க முடியாமல் போனது.
2000ஆம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மும்பையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு தேர்வு செய்யப்படவில்லை. பிறகு 4 ஆண்டுகள் கழித்து சிட்னி டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். அந்த டெஸ்ட் போட்டியில் இவர் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் இவரை விளாசி எடுத்தனர்.
ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியா இங்கு வந்தபோது மும்பை டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்ததில் இவரது பங்கு அதிகம்.
அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 104 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 203 ரன்கள் எடுத்தது. இதில் அனில் கும்ளே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முரளி கார்த்திக் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியா 2வது இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்தது. கடுமையான பள்ளம் நிறைந்த பிட்சில் சச்சின் டெண்டுல்கர் 55 ரன்களைப் போராடி எடுத்தார். லஷ்மண் 69 ரன்களை எடுத்தார்.
வெற்றி பெற 107 ரன்கள் தேவை என்று களமிறங்கிய ஆஸ்திரேலியா 30 ஓவர்களில் 93 ரன்களுக்குச் சுருண்டது. அதில் ஹர்பஜன் 5 விக்கெட்டுகளையும் முரளி கார்த்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அதே மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கான்பூரில் விளையாடிய டெஸ்ட் போட்டியே இவரது கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
ஆனால் ஒருநாள் போட்டிகளுக்காக மீண்டும் 2007ஆம் ஆண்டு தேர்வானார். அதில் மும்பையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, கடைசியில் ஜாகீர் கானுடன் பேட்டிங்கில் இணைந்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
நல்ல திறமை இருந்தும் வாய்ப்புகள் வழங்கப்பட முடியாமல் குறுகிய காலமே இவரால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடிந்தது.
கங்கூலி கேப்டன்சியில் இருந்தபோது இவர் தன் ஃபார்மில் உச்சத்தில் இருந்தார். ஆனால் கங்கூலி இடது கை ஸ்பின்னர்களை அடித்து ஆடக்கூடியவர் இதனால் இவர் மீது அவருக்கு நம்பிக்கைக் குறைவாக இருந்திருக்கலாம்.
இன்று முரளி கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
நன்றி-தி ஹிந்து