10 -02-2014 அன்று எனது கல்லூரித் தோழியின் திருமணத்திற்கு சென்று வந்து மீண்டும் கரூர் திரும்புவதற்காக ஈரோடு காளை மாடு சிலை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பரும் கரூர் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தோம்.அப்பொழுதுதான் அந்த நிகழ்வு நடந்தது..
நேரம் மதியம் 2 மணி. ஈரோடு கதிரவனின் தாக்குதலில் துவண்டு கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்க பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்த நிழற்குடை மற்றும் மர நிழலில் பதுங்கிக்கொண்டிருந்தனர். தொடர்வண்டி நிலையத்திலிருந்து வந்த நானும் எனது நண்பரும் அந்த வெயிலிலும் தேநீர் குடிக்கலாம் என்று நிழற்குடை அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைக்குச் சென்றோம். இருவரும் குளம்பி ( குழம்பிடாதீங்க காபியைத் தான் சொன்னேன்) குடிக்க முடிவெடுத்து, குடித்தும் விட்டோம். பிறகு அதற்க்கான தொகையை கொடுத்தப் பின்னர் ஊர் கதை பேச ஆரம்பித்தோம்.
அன்றைய மறுநாள் எனக்கு பண்பலையில் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி இருந்ததால் அதற்க்கு தயாராவதற்கு முன்னோட்டமாக அன்றைய தினம் நிகழ்ச்சித் தலைவர் பங்குபெற்ற நிகச்சியை கேட்டுக்கொண்டே பேச முற்பட்டோம் இருவரும்.
அயிந்து நாளிகை கடந்தது..
பேசிக்கொண்டிருக்கும் போது திருநங்கைகள் பலர் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததை கண்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு நன்கு வளர்ந்த மாநிறம் கொண்ட ஒரு திருநங்கை எங்கள் அருகில் வந்தார். அவருக்கு குரல் மட்டும் தான் ஆணின் குரலமைப்பை ஒத்திருந்தது. மங்களம் பொருந்திய தெய்வம் அருள் நிறைந்த அழகிய முகம் அவருக்கு. அருகில் வந்த அவர் ' எங்களுக்கு பணம் வேண்டும், தங்களால் இயன்றதை கொடுங்கள் ' , என்றார். இருவரும் தயங்கி நின்றோம். நண்பர் இரண்டு அடி பின்னோக்கி வைத்தார். நான் பக்கவாட்டில் நகர்ந்தேன். அவர் எங்களை விட்டு நீங்குவதாக தெரியவில்லை. தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மனதில் ஏதே தோன்றியதைப் போன்று உணர்ந்து நான் வைத்திருந்த தொகையில் சாராசரியை அவரிடம் நீட்டினேன்.அதனை அவர் பெற்றுக்கொண்டார்.
என் கண்களையும், நெஞ்சத்தையும் உருக்கி, உலுக்கிய நிகழ்வு அப்பொழுதான் என் வாழ்வில் அரங்கேறியது.
பணத்தினைப் பெற்றுக்கொண்ட அவர், அவர் கைகளை நீட்டிக் கொண்டே என் அருகே வந்தார். நான் கொஞ்சம் பயத்தில் பின்னோக்கி நடந்தேன். ஒட்டியிருந்த தன் இதழ்களைப் பிரித்து என் வாழ்வில் மறக்க முடியாத வார்த்தைகளை உதிர்த்தார். ' ஏன் தம்பி எங்களை பாத்து பயந்துக்குற. நானும் உங்க வீட்டுல இருக்குற அக்க தம்பி மாதிரி தான். என்னையும் உங்க வீட்டுல உள்ள அக்காவா நினைச்சுக்க மாட்டாயா ? ' , என்று கேட்டார். என் கண்களின் கண்ணீர் வந்துவிட்டது. பின் நகர்வதை நிறுத்தி திடமாக நிற்க ஆரம்பித்தேன். என் அருகே வந்த அவர் தன் கைகளை என் தலையில் வைத்து வாழ்த்து சொன்னார். அதுவரை என்னை யாரும் அவ்வாறு வாழ்த்தியதே இல்லை. என் மனம் அந்த நொடியில் கடவுளின் வாழ்த்தைப் பெற்றாதாக நினைத்து பூரிப்படைந்ததை விவரிக்க வார்த்தையே இல்லை. அந்த தருணத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் நான் உணர்ந்தது அவ்வளவு மகிழ்வான தருணம்.பின் எங்களை நீங்கிச் சென்றார்.
பிறகு அவர் பேருந்து நிழற்குடைக்கு சென்று தனது ஒத்த நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்துகொண்டார். ஏதோ பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் எனது கண்கள் அவரை தேடியது. அவரும் என்னை கண்டார். ஏதோ பல நாள் பழகிய நண்பர் பிரிந்ததைப் போன்று உணர்ந்தேன். பிறகு எங்களுக்கான பேருந்து வரவே.. நாங்களும் அங்கிருந்து கிளம்பினோம். ஆனால் அந்த நிகழ்வும், அந்தச் சொற்களும் மறக்க முடியாத வடுவை என்னுள் ஏற்படுத்தியது.
அப்பொழுதான் அதனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். 'ஏன் இவர்கள் இப்படி வாழ்கிறார்கள்?, என்ன காரணம்? , என்று. பிறகு நீண்ட நேரம் சிந்தனைக்குப் பிறகு தான் நான் தெளிவுற்றேன். இது அவர்களுடைய குற்றம் இல்லை. இந்த சமூகத்தின் குற்றம் என்று. அவர்களை குற்றம் கூறும் இந்தச் சமூகம் அவர்களுக்கான வாழ்வாதாரம் என்று எதனை ஏற்படுத்தித் தந்திருக்கிறது?. தன்னிலை உணராதவராயினும் (மனநிலை பாதிக்கப்பட்டவர்) பசி என்ற ஒன்றை மட்டும் இறைவன் அனைவருக்கும் படைத்துவிட்டான். இதில் மட்டும் தான் அவனும் பொதுவுடைமைக்காரன் போல. நடுத்தர வாழ்க்கை வாழா இல்லாவிட்டாலும் தன்னுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவாவது அவர்களுக்கு பணம் என்ற சாத்தானான இறைவன் தேவைப்படுகிறான். அதனை ஈட்டுவதற்கான எந்த பணிக்கான சூழலினையும் இந்தச் சமூகம் ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக கேளிக்கைக்கும், கேலிக்கையாகவும் அவர்களை காண்பித்ததே தவிர வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் நானும் இவ்வளவு நாள் காண்பித்த நிகழ்வைக் கண்டு இருந்துவிட்டேனே என்ற என்மீதான வெறுப்பையும், இப்பொழுதாவது கண்ணைக் கட்டியிருந்த துணியை அகற்றி எனது பார்வையில் சிந்தை கலந்து நேர்கொண்ட பார்வையில் காண முற்பட்டதையும் கண்டு மகிவுற்று மனம் நிம்மதி அடைந்தேன். ![]() |
மயங்காதே மனமே...! மாற்றம் தான் உன்னில் தினமே...!
சிந்தனை செய் மனமே...! சிறு பிள்ளையாய் அலையாதே தினமே...!
- கரூர் கவியன்பன்