[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பயங்கரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

பயங்கரத்தை நோக்கிப் பயணிக்கிறோம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 16th, 2014, 1:05 pm

Image

பல நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்றுவிட்ட நிலையில் சிறிய காயங்கள், சாதாரணத் தொற்றுகள் இவற்றிலிருந்து கூட நம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாத, அவர்கள் அதற்குப் பலியாகும் பரிதாபமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனற்றவையாகி விட்டன.

எழுபது ஆண்டுகளுக்கு முன் (1945)மருத்துவத்திற்கான நோபல் பரிசு பென்சிலின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்த ஐரோப்பிய மருத்துவ ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஃபிளம்மிங்கிற்கு வழங்கப்பட்டது. விழாவில் ஃபிளம்மிங்கின் பெயர் அறிவிக்கப்பட்டதும் நாற்காலியில் இருந்து எழுந்தவர் ஒரு பெரிய தும்மல் போட்டார். அருகில் இருந்தவர்கள் கிண்டலாக, ‘நீங்கள் இப்போது பரப்பிய கிருமிகளை உங்கள் ஆன்டிபயாடிக் மருந்து அழிக்குமா?’ என்று கேட்டார்கள் பலத்த சிரிப்பினூடே. ஃபிளம்மிங் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையோடு மேடையேறி நோபல் பரிசை வாங்கினார்.

மருத்துவ விஞ்ஞானியான ஃபிளம்மிங்கிற்குத் தெரியும், ‘தான் கண்டுபிடித்தது பாக்டீரியா தொற்றை அழிப்பதற்கான மருந்தே தவிர, வைரஸ் தொற்றை அல்ல’ என்று. ஆனால் இன்று சாதாரண ஜலதோஷத்திலிருந்து உயிர்க்கொல்லி நோய்கள் வரை அனைத்துக்கும் ஆன்டிபயாடிக்களை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம். விளைவு?

சிறிய காயங்கள், சாதாரணத் தொற்றுக்கள் இவற்றிலிருந்து கூட நம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாது. அவர்கள் அதற்குப் பலியாகும் பரிதாபமான நிலை உருவாகும். சுருக்கமாகச் சொன்னால் நாம் ஆன்டிபயாடிக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலத்தில் மனித குலம் எப்படி இருந்ததோ, அந்த நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அதாவது பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இது கற்பனை அல்ல. உலக சுகாதார நிறுவனம் விடுத்திருக்கும் எச்சரிக்கை.

60 ஆண்டுகளுக்கு முன் பொதுவான சில தொற்றுகள், சிறிய காயங்களுக்கும் மனிதர்கள் கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருந்தார்கள். உலகின் முதல் ஆன்டிபயாடிக் பென்சிலினை தொடர்ந்து பல ஆன்டிபயாடிக் மருந்துகள் நடைமுறைக்கு வந்தன. மருந்துகளை தவறாகப் பயன்படுத்தியதில் நம்முடைய தவறான அணுகுமுறை மீண்டும் பழைய காலத்திற்கே நம்மைக் கொண்டு போகிறது என்பதுதான் உலக சுகாதார மைய அறிக்கையின் சாராம்சம்.

நோபல் பரிசு ஏற்கும் விழாவில் ஃபிளம்மிங் பேசியபோதே ஓர் எச்சரிக்கையும் விடுத்தார், ‘பாக்டீரியா ஒரு எதிர் புணர்வுடைய நுண்ணுயிரி. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் தன்னுடைய எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டது. ஒருமணி நேரத்தில் ஒவ்வொரு பாக்டீரியாவும் பதினாறு (3-ஆம் தலைமுறை) பாக்டீரியாவை உருவாக்கும் வலிமை கொண்டது, ஒவ்வொரு தலைமுறை பாக்டீரியாவும் உருவாகும்போது அது எதிர்ப்புச் சூழலில் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வதற்கான மரபணுக்கள் வலிமைப்படுத்தப்படும்’ என்றார். அதாவது நாளுக்கு நாள் பாக்டீரியாக்களுக்கு அவற்றைக் கொல்லும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆன்டிபயாடிக்களை விட வலிமை அதிகரிக்கும்.

இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945) பென்சிலின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதனால் போரில் காயம்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களைக் காப்பாற்ற முடிந்தது. இந்தச் சாதனை நவீன மருத்துவத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆன்டிபயாடிக் யுகம் மலர்ந்தது. அதுவரை உயிர்க்கொல்லி நோய்களாக அச்சுறுத்தி வந்த பல நோய்களை வெல்ல முடிந்தது. சிறு காயத்திற்குக் கூட விரலையோ, கையையோ, காலையோ வெட்டி உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை மாறியது.

ஆனால் மருந்துகளைப் பயன்படுத்துவதில் மக்களின் அறியாமை, டாக்டர்களின் சுயநலம், மருந்து தயாரிப்பாளர்களின் வர்த்தக நோக்கு என்று கடந்த 50 ஆண்டுகளாக நுண்கிருமிகளை அழிக்க நாம் பயன்படுத்திய பென்சிலின் உட்பட பல ஆன்டிபயாடிக் மருந்துகள் வீரியம் அற்றவையாக ஆகி வருகின்றன என்கிறது உலக சுகாதார மையத்தின் அறிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரும் சீனாவில் 80 ஆயிரம் பேரும் ஐரோப்பாவில் 25 ஆயிரம் பேரும் சராசரியாக ஆன்டிபயாடிக் மருந்துகளால் பலன் இல்லாமல் வீரியமிக்க பாக்டீரியா தொற்றால் இறக்கிறார்கள். இந்தியாவில் இதுபற்றிய சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்றாலும் இந்த எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.

இவ்வளவு அபாயகரமான நிலையிலா நாம் இருக்கிறோம்? மருத்துவர்களிடம் பேசியது, ‘புதிய தலைமுறை’.

பென்சிலினைத் தொடர்ந்து ஸ்ட்ரெப்டோமைசின் உட்பட பல ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காரபாபீனம் என்ற ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 4, 5 வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது. அதன்பின் புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பதில் எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை" என்று கூறிய அரசு ஸ்டான்லி மருத்துவமனை குடல், இரைப்பைத் துறை முன்னாள் தலைவர் டாக்டர். ஆர்.சுரேந்திரன் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் டாக்டரின் மருந்துச் சீட்டு (prescription) இல்லாமல் எந்த மருந்தையும் வாங்க முடியாது. இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.

சாதாரணமாக ஜலதோஷம் பிடிக்கிறது. உடனே மருந்துக் கடையில், ‘சிப்ரோபிளாக்ஸ் குடுங்க’ என்று வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். ஜலதோஷம் பிடிப்பதற்குக் காரணம் வைரஸ் கிருமி. அதற்கு பாக்டீரியாவை அழிக்கும் ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிட்டால் எப்படிச் சரியாகும்? இப்படியே தொடர்ச்சியாக தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை நாம் சாப்பிடச் சாப்பிட இந்த மருந்தை எதிர்த்துப் போராடும் வலிமையை நுண்ணுயிரிகள் பெற்று விட்டன.

சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளை ஐசியூவில் வைத்துப் பாராமரிக்க வேண்டும். சிக்கலான அறுவைச் சிகிச்சையை நாங்கள் எவ்வளவு திறமையாக கையாண்டாலும் தொற்று என்ற ஒரு காரணத்தினாலேயே அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க முடிந்த அளவு ஒவ்வொரு முறையும் முந்தைய மருந்தைக் காட்டிலும் அதிக வலிமையுள்ள ஆன்டிபயாடிக் மருந்தைத் தர வேண்டியுள்ளது" என்கிறார் டாக்டர். சுரேந்திரன்.

மருந்துகளுக்கு எதிராக கிருமிகள் பெற்றுவிட்ட வலிமை, பச்சிளங் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. இது குறித்து, சூர்யா மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவு இயக்குநர் டாக்டர். தீபா ஹரிஹரன், 10 ஆண்டுகளுக்கு முன் வீரியம் (dosage) குறைவாக உள்ள ஆன்டிபயாடிக் மருந்தைப் பயன்படுத்தினோம். இப்போது அவை எதுவும் பலன் தருவதில்லை.

20 வகையான மருந்துகள் பயன்படுத்திய இடத்தில் தற்போது 2 அல்லது 3 மருந்துகளே பயன்படுத்த வேண்டியுள்ளது. என்ன தொற்று என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் இதன் முடிவு தெரிய 24 முதல் 48 மணி நேரம் ஆகும். அதுவரையிலும் சிகிச்சை தராமல் ரிஸ்க் எடுக்க வேண்டாமே என்று வெளிப்படையாகத் தெரியும் சில அறிகுறிகளை வைத்து, குறிப்பிட்ட பாக்டீரியா பாதிப்பு இருக்கலாம் என்ற யூகத்தில் சிகிச்சையை ஆரம்பித்து விடுவோம். அபூர்வமாக முடிவு வேறு மாதிரி இருந்தால் 48 மணி நேரத்தில் கொடுத்த மருந்தால் பலன் இல்லை. தொற்றுக்குத் தகுந்த வேறு மருந்தை மாற்ற வேண்டும்.

அதுவரையிலும் கொடுத்த மருந்திற்கு பாக்டீரியா வலிமை பெற்று விடும். ஆன்டிபயாடிக்கில் இருப்பது நுண்ணிய மூலக்கூறுகள். அவை பாக்டீரியா செல்களுக்குள் நுழைந்து அவற்ை அழிக்கிறது. இந்த அழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள பாக்டீரியாவில் உள்ள மரபணுக்களில் தொடர்ச்சியாக மாற்றம் (gene mutation) நிகழ்ந்துகொண்டே இருக்கும். மரபணுக்களில் நடக்கும் இந்த மாற்றத்தை மிக விரைவாக அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும் தன்மையும் அவற்றிற்கு உண்டு. பாக்டீரியா தொற்று ஏற்படும்போது டாக்டர் சிபாரிசு செய்யும் மருந்தை முழுமையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கிருமி பல மடங்கு வலிமையாகிவிடும்" என்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்டிபயாடிக் பயன்பாடு 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சாதாரண ஜலதோஷத்திற்கும் 70 சதவிகிதம் டாக்டர்கள் ஆன்டிபயாடிக் மருந்தைத் தருகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உண்மைதான்.

20 ஆண்டுகளுக்கு முன் ஆன்டிபயாடிக் மருந்தின் விலை 5 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 30 ரூபாய் என்று இருந்தது. ஆனால் இன்று 3 நாட்கள், 5 நாட்கள் என்று தொற்றின் வீரியத்தைப் பொறுத்து மருந்தின் விலை அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. மருந்துத் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் லாப நோக்கு ஒருபுறம் என்றால் அதிக கமிஷனுக்கு ஆசைப்படும் டாக்டர்கள் தேவை இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட கம்பெனியின் மருந்தை எழுதித் தருகிறார்கள். 50 சதவிகிதம் மருந்துகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே விற்பனை ஆகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது" என்று சொல்லும் டாக்டர். தீபா, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுபவை என்று டாக்டர்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் குணம் தெரியாத நிலையில் எங்கே நோயாளி வேறு டாக்டரிடம் போய்விடுவாரோ என்று தேவையில்லாமல் வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்தை எழுதித் தருகிறார்கள். இப்படியே ஒவ்வொரு முறையும் அநாவசியமாக ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிட்டு உண்மையில் பாக்டீரியா தொற்று வந்தால் எந்த மருந்தும் பலன் தருவதில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பெரிய சவால் பச்சிளங் குழந்தைகளுக்கு செப்டிசீமியா எனப்படும் ரத்தத் தொற்று, நிமோனியா போன்ற பிரச்சினைகளுக்கு வீரியமிக்க மருந்துகளைத் தர வேண்டியுள்ளது" என்கிறார்.

காசநோய் பாதிப்பிற்கு 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை ஆன்டிபயாடிக் மருந்துகளை பல மருந்துகள் சேர்த்து கூட்டாகத் தர வேண்டிய சூழலில் புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல" என்கிறார்கள் டாக்டர்கள்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ விஞ்ஞானி டாக்டர். டி.ராஜ்குமாரிடம் பேசியபோது, பென்சிலின் பெரிய வரமாக இருந்தாலும் கிராம் பாசிடிவ் (gram positive), நெகடிவ் என்ற 2 வகைக் கிருமிகளில் முதல் வகையை மட்டுமே அழிக்க முடிந்தது. தொடர்ந்து நடந்த ஆராய்ச்சியில் ஸ்டெப்ட்ரோமைசின், ஜென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு காசநோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பை பெருமளவில் தவிர்க்க முடிந்தது. தொடர்ந்து இந்த மருந்துகளைப் பயன்படுத்தியதில் மருந்தை எதிர்த்துப் போராடும் வலிமையை கிருமிகள் பெற்றுவிட்டன.

கால்நடைகளுக்கு எந்த அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் சில வரையறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால் பண்ணைகளில் வர்த்தக நோக்கில் வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் கிருமிகள் அதிக வலிமை பெற்றுவிட்டன.

புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது ரத்தத்தில் வெள்ளை அணுக்களில் உள்ள நியூட்ரோபிளிக்ஸ் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதனால் ரத்தத்தில் தொற்று, நிமோனியா, சிறுநீரகத் தொற்று ஏற்படும். 3-ஆம் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்துகள்கூட வீரியம் இழந்த நிலையில் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரிய சவாலாக உள்ளது. இந்த அபாயத்தைக் குறைக்க, ஒவ்வொரு கேன்சர் மையத்திலும் புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு கிருமிகளை வலிமையாக எதிர்ப்பது பற்றி தொடர்ந்து கண்காணிக்கிறோம்" என்று விளக்கினார்.

தனியார் மருந்துவமனைகளில் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற ஆன்டிபயாடிக் கண்காணிப்பு மையங்கள் செயல்படுவதாகக் கூறும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அசோசியேட் பேராசிரியர் டாக்டர். ரமா சந்திரமோகன், நம் உடம்பில் ஒரு தொற்று ஏற்பட்டால் அதை எதிர்த்துப் போராடும் த்மை நம் உடம்பிற்கு உண்டு. அதனால் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் என்றவுடனேயே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையைப் பெற உடம்பிற்கு 2 நாட்கள் ஆகலாம். அதனால் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. நம்மால் சமாளிக்க முடிகிறது எனும்போது ஓரிரு நாட்கள் பொறுத்து பிரச்சினை அதிகமானால் மட்டும் டாக்டரின் ஆலோசனையின் பேரில் மருந்து சாப்பிட்டால் போதும்.

உதாரணமாக வயிற்றுப் போக்கு என்றால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. கவனமாக நிறைய நீராகாரம் எடுத்து ஓய்வாக இருந்தால் போதும். உடனடியாக மருந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். ஆனால் வயிற்றைப் பாதித்த பாக்டீரியா வெளியேறாமல் உடம்பிலேயே தங்கி விடும். அடுத்த முறை இதே பிரச்சினை வந்தால் முந்தைய மருந்தைக் காட்டிலும் வீரியம் கூடுதலாக மருந்து சாப்பிட வேண்டியிருக்கும்" என்று எச்சரித்த டாக்டர். ரமா ஆன்டிபயாடிக் குறித்த நம்பிக்கையும் தந்தார்.

பென்சிலின் வீரியம் குறைந்து விட்டது என்பதால் கடந்த 2, 3 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் அதைப் பயன்படுத்தவே இல்லை. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தியபோது கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பது தெரிந்தது. ஒரு ஆன்டிபயாடிக்கில் மருந்தை எதிர்க்கும் வீரியத்தை கிருமிகள் பெற்றது தெரிந்தால் அந்த மருந்தின் பயன்பாட்டை சில ஆண்டுகளுக்கு நிறுத்தி விடுவது நல்லது" என்கிறார்.

என்ன செய்யக் கூடாது?

சாதாரண ஜலதோஷத்திற்கு ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடவே கூடாது.

எத்தனை நாட்கள், எந்த அளவில் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிட டாக்டர் சொல்கிறாரோ, அதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 2 நாட்கள் 3 வேளை சாப்பிட்டவுடன் சரியாகிவிட்டது என்று 5 நாட்களுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்ததை நிறுத்தக் கூடாது. கால்நடை, கோழிப்பண்ணை பராமரிப்பவர்கள் தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.


நன்றி-புதியதலைமுறை
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 50 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron