–
வித்தியாசமாக நடக்கத் தெரியவில்லை
குயில்களுக்கு
–
அரிய வாய்ப்பிருந்தும்
உலகம்
அறியும் வாய்ப்பிருந்தும்
தவறவிட்டன வித்தியாசத்தை
–
காக்கையும் குயிலும்
கறுப்புதான்
வித்தியாசப்படுத்த வேண்டியது
வித்தியாசப்பட வேண்டியது
குயில்களல்லவா?
–
காக்கைக்கும் குயிலுக்கும்
குரலின் நிறமும் கறுப்பென்றால்
வித்தியாசத்திற்கிடமில்லை
–
வித்தியாசம் தேடி அலைவதாய்
அலட்டிக்கொள்ளும் குயில்கள்
குரலின் தரத்தைக் காட்டவேண்டாமா?
–
குயில்கள் கும்மி கொட்டுவதெல்லாம்
இப்படிக்
குரலின் நிரமிழந்து போவதற்குத்தான்
என்பது உண்மையாகிறது
–
நிறம்பூச
தாகமிருப்பதும்
தவமிருப்பதும்
வெளிச்சமாகிறது
–
வாய்புக்காக வித்தியாத்தையும்
வித்தியாசமான நேரங்களில் வாய்ப்பையும்
இழந்துவிடுகின்றன குயில்கள்
–
தனித்தநல் கருங்குயிலை
தவமிருந்து பெறுவோம்
அதுவரை
குயில்கள் என்பது புனைபெயரே!
–
—————————-
பிச்சினிக்காடு இளங்கோ
அந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து