குளத்தின் நீர்பரப்பு
ஆம்பல் இலைகளினால்
போர்த்தப்பட்டிருக்கிறது
–
நிலத்தைத் தொடமுயன்ற
தோற்றுத் திரும்பும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
இலைகள்
–
அங்கொன்றும் இங்கொன்றுமென
காற்றில் புரளும்
ஆம்பலின் இலைகளில்
செம்மை படர்ந்திருந்தன
–
நெடுந்தூரம் கடந்து வந்த களைப்பிலும்
தாகத்திலும்
பாசி படர்ந்திருந்த நீர்ப்பரப்பில்
தாகத் தனித்துக்கொண்ட
–
நீர்ப்பறைவைகளின் பாதம் பட்டு
கலைந்த பாசி
மீண்டும் மூடிக்கொண்டது
–
குளத்தின் ஆழம்
ஒருபோதும்
தீர்ந்துவிடாத தாகத்தைத் தருகின்றது
–
———————–
சக்தி ஜோதி
எனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து