இட்டது: ஏப்ரல் 25th, 2014, 2:50 pm
by Raja
Image

அணிகலன்கள் அணிவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. கொலுசு அணிவதில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனி. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கொலுசை பயன்படுத்தி உள்ளனர்.

கொலுசுக்கு இந்தியாவில் வரலாற்று பாரம்பரியமும், பின்னணியும் உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வெள்ளியால் நகை ஒவ்வாமை பிரச்சினை ஏற்படாது.

இந்திய நடனப் பெண்கள் தங்களது அங்க அசைவுகளுக்கு ஏற்ப இனிய ஒலி எழுப்பும் கால் சலங்கை என்ற அணிகலனை அணிந்தார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் வயிற்றசைவு நடனமாடும் மங்கைகள், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொலுசுகளை அணிந்தார்கள். அமெரிக்காவில் கொலுசு அணியும் பழக்கம் 1950–ம் ஆண்டுகளில் ஏற்பட்டது.

பழங்காலத்தில் பெண்கள் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்கள் அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதியினர் (ராஜஸ்தான்) அதிக எடையுள்ள தடிமனான காப்பு போன்ற கொலுசுகளை அணிகிறார்கள்.

பழங்காலத்தில் மாம்பிஞ்சு, அத்திக்காய், ஆலங்காய் கொலுசுகள் என்று பல வடிவங்களில் அணிந்துள்ளார்கள்.
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. குழந்தையின் அசைவுகளை உறங்கும் போதும், விழித்து இருக்கும் போதும் கொலுசு ஒலி, தாய்க்கு அறிவிக்கும்.

அந்த காலத்தில் இளவயது பெண்கள் கொலுசு அணிய மாட்டார்கள். திருமணமான பெண்கள் மட்டுமே அணிந்து வந்துள்ளனர். தங்களுக்கு திருமணமான செய்தியை கால் கொலுசு சத்தம் மூலம் பிறருக்கு தெரிவிப்பதாக அறியப்பட்டு வந்தது.

ஆனால் காலப்போக்கில் கொலுசை எல்லா பெண்களும் அணியும் நிலை வந்து விட்டது.
திருமணச் சடங்குகளில் மணப்பெண் கொலுசு அணிவது ஒரு முக்கிய மரபு. பஞ்சாப் மாநிலத்தில் கொலுசுக்கு ‘ஜாங்கீர்’ என்று பெயர். இதற்கு சங்கிலி என்பது பொருள். இதை திருமணச்சடங்குகளின் போது பெண்களின் காலில் அணிவிப்பார்கள்.

சின்ன சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட கொலுசுகள் பழைய மாடலாகி விட்டன. தற்போது கொலுசுகள் எளிமையான வேலைப்பாடுகளுடன் மெல்லிய சங்கிலி போல வடிவமைக்கப்படுகின்றன. மெட்டியையும், கொலுசையும் இணைத்து ஒரு வடிவம் கொடுத்துள்ளார்கள். முன்பு கொலுசுகள் புடவையுடன் அணியப்பட்டு வந்தன.

தற்போது நவீன உடைகளுக்கு ஏற்ப நவீன பாணி கொலுசுகளை அணிகிறார்கள். ஒரே காலில் சில பெண்கள் 2 விதமான கொலுசுகளை அணிகிறார்கள். தங்கம், வெள்ளி கொலுசுகள் மட்டுமல்லாமல் தோல், பிளாஸ்டிக், நைலான், சாதாரண நூல் என பலவகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கொலுசுகளையும் பெண்கள் அணிகிறார்கள்.

தங்கம், வெள்ளியில் செய்யப்படும் கொலுசுகள், சின்ன சின்ன முத்துக்கள் சேர்க்கப்பட்டு மெல்லிய சங்கிலியால் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த சங்கிலி மெல்லியதாகவோ அல்லது பட்டையாகவோ இருக்கும். முழுக்க முழுக்க முத்துக்களை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்களை இணைத்தோ கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன.

செயற்கை கற்களான போல்கி கற்கள், குந்தன் கற்கள், குறை மணிக்கற்கள் (செமிபிரிசியஸ்) பதித்து செய்யப்படும் தண்டைகள், பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.


நன்றி-மாலைமலர்