இட்டது: ஜூன் 9th, 2014, 5:38 pm
by கார்த்திவாசுகி
Image

செழுமையான செம்மண் பூமி. சிவந்த பழங்களுடன் தக்காளித் தோட்டம், பருத்த கிழங்குகளுடன் அறுவடைக்குத் தயாராகப் பீட்ரூட், பளிச் என வெள்ளை நிறத்தில் சிரிக்கும் முள்ளங்கிகள். நெல் வயல்கள், செங்கரும்பு, மக்காச் சோளம், அவரை, கொத்தவரை, பீன்ஸ், கத்தரி, மிளகாய் என ஒவ்வொரு காய்கறி, தானிய வகைக்கும் தனித்தனித் தோட்டங்கள். இன்னும் நெல்லி மரங்கள், கறிவேப்பிலை மரங்கள், குட்டை ரகத் தென்னைகள் என 35 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் போர்வை போலப் படர்ந்திருக்கும் விதவிதமான தோட்டங்கள். அத்துடன் இரண்டு மீன் வளர்ப்பு குளங்களும் உண்டு.

அது விவசாயப் பல்கலைக்கழக வளாகமோ, வேளாண் பண்ணையோ அல்ல. நம்பித்தான் ஆக வேண்டும், அது திருச்சி மத்தியச் சிறை வளாகம். சிறை வளாகத்தில் இப்படி வகைவகையான தோட்டங்களா என வியப்படைந்த நேரத்தில், இந்தத் தோட்டங்கள் அனைத்துமே இயற்கை விவசாய முறையில் பராமரிக்கப்படுகின்றன என்று சிறை அதிகாரிகள் கூறிய தகவல் மேலும் வியப்பைத் தருகிறது.

மறந்துபோனது

“ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளேன். நான் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்தவன். இவ்வளவு காலம் சிறை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தற்போது இந்தத் தோட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பகல்பொழுதில் பெரும்பகுதி தோட்டத்திலேயே கழிந்து விடுகிறது. பகலில் கடுமையாக உழைப்பதால் இரவு நன்றாகத் தூங்குகிறேன். மறுநாள் காலை மீண்டும் தோட்டத்துக்கு வந்துவிடுகிறேன். இதனால் சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே என்னிடம் மறைந்துவிட்டது” என்கிறார் சிறைத் தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சி. கிருஷ்ணமூர்த்தி.

இவரைப் போலவே தோட்டத்தில் பணியாற்றும் எல்லாக் கைதிகளுமே மனஉளைச்சல் அற்றவர்களாக, உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகத்தை மறந்தவர்களாக, அவரவர் சொந்தத் தோட்டத்தில் உழைப்பதைப் போன்ற நிறைவான மனநிலையில் பணியாற்றுவதை உணர முடிந்தது.

“விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சிறையில் பெரும்பாலும் உள்ளனர். இயல்பாகவே விவசாய நுட்பங்களை அறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளச் சிறை வளாகத்தில் உள்ள இந்த இயற்கை வேளாண் தோட்டங்கள் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன” என்கிறார் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.

எப்படிச் சாத்தியமானது?

சிறை வளாகத்தில் இது எப்படிச் சாத்தியமானது?

“சிறை வளாகம் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டடி அல்ல. மறுவாழ்வைத் தேடித் தர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி கைதிகளிடையே திறன் வளர்ப்பு பயிற்சிகள், திறன் படைத்த கைதிகளைக்கொண்டு பொருள் உற்பத்தி, அவற்றைச் சந்தைப்படுத்தும் சிறை அங்காடிகள் போன்றவற்றை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தலைமையில் டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா ஆகியோர் அளித்த ஊக்கம் காரணமாகத் திருச்சி சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்க முனைந்தோம்.

சுமார் 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருச்சிச் சிறை வளாகத்தில் பெரும்பகுதி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த முட்புதர்கள்தான். அந்தச் சீமைக் கருவேல மரங்களை அழித்து, இந்தச் சாகுபடித் தோட்டங்களை உருவாக்க எங்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.” என்கிறார் திருச்சி சரகச் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஆர்.துரைசாமி. இயற்கையைச் சிதைக்காமல் வேளாண்மை செய்ய, இங்கே மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 5 டன் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நாளொன்றுக்குச் சுமார் 100 கிலோ தக்காளியும், 70 கிலோ வரை பீட்ரூட், முள்ளங்கி, அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளும் கிடைக்கின்றன. சிறை பயன்பாடு போக எஞ்சியவற்றை விற்பனை செய்யச் சிறை வாசலிலேயே அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட ஊட்டம் மிகுந்த காய்கறிகள் என்பதால், இந்த அங்காடிக்குப் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு.

சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி, மற்றொரு கண்காணிப்பாளர் கே.ஜெயபாரதி, கூடுதல் கண்காணிப்பாளர் மா.செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிறை நிர்வாகம் தவிர்த்து, இயற்கை வேளாண் நுட்பங்களிலும் தேர்ந்த அனுபவம் பெற்றிருப்பதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியப்பட்டுள்ளன.

சிறைக்குள் மனித வளத்துக்குப் பஞ்சமில்லை. சிறை அறைகளுக்கு வெளியே வளம் மிகுந்த செம்மண்ணும், நிறைந்திருக்கும் நீர் வளமும் உள்ளன. இந்த வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியதன் காரணமாகத் திருச்சி மத்தியச் சிறை வளாகம், இன்றைக்கு இயற்கை வேளாண்மையின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது.

நன்றி: தி இந்து