இட்டது: மார்ச் 30th, 2018, 1:01 pm
by A.J.Gnanenthiran
குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.
:-sh
விண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.
வீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.
இதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.
வகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.
பொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.
“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.
1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.

1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.
இப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.
பிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.
.
இவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.
இந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.
ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.
அவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்
.