இட்டது: மார்ச் 29th, 2018, 11:28 am
by A.J.Gnanenthiran
-ஏ.ஜே.ஞானேந்திரன்-
வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா? அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே”? இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.
இங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….
அவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா ?
“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”
“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய்? இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ”? “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”
“வீடியோப் படமும் எடு;க்கலாமோ..”?
“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”?
“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….
…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.
……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.
அறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் ? திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.
அம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.
“எங்கடி கள்ளன் ”?என்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும்? தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன்? என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா? வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.
ajgswiss@gmail.com