இட்டது: மார்ச் 28th, 2018, 2:46 pm
by A.J.Gnanenthiran
ஏ.ஜே.ஞானேந்திரன்


”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.
13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.
கனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.
பந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்!
உடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.
இந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.
அவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.
பனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்!
எந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம்? இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா? நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.
கிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும்? ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.
1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.
துடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.

மொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.
கனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும்? அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்