இட்டது: ஜூன் 30th, 2014, 7:49 pm
by பாலா
Image

இணையதளப் பயன்பாடுகளில் தற்போது குழந்தை மருத்துவம் உட்பட பெற்றோர்களிடத்தில் தோன்றும் உடல்நலன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு எல்லாம் மருத்துவர்கள் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

குழந்தை பிறப்பை எதிர்நோக்கும் இளம் தாய்மார்களும் இதன்மூலம் பலன் பெறமுடியும். இதில் வரக்கூடிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்க நிறைய நேரமும், பொறுமையும் தேவைப்படுகின்றது. ஆயினும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் பெற்றோர்களின் தெளிவற்ற நிலையை சீராக்கவும் தான் விரும்புவதாக டாக்டர் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

மருத்துவர்கள் நடத்தும் வலைத்தளத்தில் பெற்றோர்கள் தங்களின் அனுபவங்களையோ அல்லது தங்களின் கேள்விகளையோ மின்னஞ்சல் மூலம் அனுப்ப இயலும். மேலும் பாதுகாப்பு குறித்த வீடியோக்களும் இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளன. முதலுதவி அடிப்படைகள் தெரியாத பெற்றோர்களுக்கு இந்த வீடியோக்களும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பெற்றோர்களிடமிருந்து தனியே வாழும் தம்பதியருக்கும் இந்த வலைத்தளங்கள் உதவிகரமாக இருக்கும். ஆலோசனை சொல்ல ஒரு வயதான நபர் இல்லாதபோது தங்களுக்குத் தோன்றும் அடிப்படை சந்தேகங்களுக்காக இவர்கள் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் கிஷோர்குமார் தெரிவிக்கின்றார். இவர் மருத்துவர் குழு ஒன்று நடத்தும் வலைத்தளத்தின் ஆசிரியராகவும் இருக்கின்றார்.

இவர்களது குழு பெற்றோர்களின் பகுதி தவிர குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் பற்றிய தகவல்களையும் தருகின்றது. மருத்துவர்களிடம் நேரடியாக கேட்க தயங்கும் பல கேள்விகளுக்கும் பெண்கள் இணையதளம் மூலம் விடை பெறுவது எளிதாக இருக்கும் என்று கூறும் டாக்டர் தீபா ஹரிஹரன் தலைமையிலும் ஒரு வலைத்தளம் செயல்படுகின்றது.

இந்தியாவில் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும் இதுபோன்ற தகவல் பக்கங்களை பெற்றோர்களிடத்தில் பிரபலப்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படும்.

ஆயினும், நம்பகத்தன்மையைத் தரும் இது போன்ற தகவல் பக்கங்கள் மூலம் மக்கள் இவற்றின் பின்னணியையும் தெரிந்து கொள்ளமுடியும் என்று டாக்டர் பிரியா சந்திரசேகரன் கருதுகின்றார்.