இட்டது: ஏப்ரல் 4th, 2018, 1:44 pm
by A.J.Gnanenthiran
தெருவை நிறைக்கும் வாகனங்கள், காந்தனைப் பயமுறுத்தின. ஒரு தசாப்தத்திற்கு முன்பு, யாழ்பாணத்து தெருக்களில் இந்த நிலைமை இல்லை. தெருவில் செல்லும் சைக்கிள்களின் தொகை நன்றாகவே அருகிப் போயிருந்ததை அவன் கண்டான். அவற்றின் இடத்தை ஸ்கூட்டர்கள் பிடித்திருந்தன. இளவட்டங்கள் ஸ்கூட்டர்களில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு, வாகனங்களைச் செலுத்தும் வேகம் அவனை அசர வைத்தது.. பத்திரிகைச் செய்திகளில் தினமும் எங்காவது விபத்துக்கள் நடந்த செய்தி வரத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு சாலை விபத்துக்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் மலிந்து போயிருக்கின்றன. அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் விபத்துக்கு உள்ளாகின்றார்கள் என்று பொலீஸார் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்கள்…. ஸ்கூட்டர் ஓடுவது யாழ்ப்பாணத்து நாகரீகமாகி விட்டதோ என்று எண்ணுமளவிற்கு, இதன் பாவனையாளர்கள் கிடுகிடு வேகத்தில் அதிகரித்து இருக்கின்றார்கள்
இதுவரையில் சைக்கிளையே நம்பியிருந்த காந்தன் இப்பொழுது தானும் ஒரு ஸ்கூட்டர் வாங்க முடிவெடுத்திருக்கிறான். முழந்தாள் வேதனையால் அதிக தூரம் நடக்கச் சிரமப்படும் தன் மனைவி, எங்கு செல்வதாக இருந்தாலும் ஆட்டோ பிடித்தே செல்ல வேண்டியிருந்தது. எனவே தான் சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்து விட்டால், ஒரு ஸ்கூட்டரை வாங்கி விடலாம். மனைவியையும் ஏற்றிச் செல்லலாம் என்பதுதூன் அவன் போட்ட கணக்கு.. குறுக்கும் நெடுக்குமாக கேகேஎஸ் வீதியில் சர் சர்ரென்று ஓடும் வாகனங்களைக் காணும்போதெல்லாம் பயம் வந்தாலும், அப்படி என்னதான் நடந்து விடப்போகின்றது என்று மனதை ஆறுதல்படுத்திக் கொள்வது அவன் வழமை. காசைக் கட்டினால் நல்ல பயிற்சி கொடுத்துபரீட்சைக்கு தயாராக்கி விட பயிற்சி நிலையம் இருக்கின்றது என்ற தகவல் கிடைத்தது. நேராக ஒரு பயிற்சி நிலையத்திற்குச் சென்றான்.
“வணக்கம். நான் ஸ்கூட்டர் லைசன்ஸ் எடுக்க வேணும்”…
அங்கிருந்த பெண் ஒருத்தி எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார். “மெடிக்கல் டெஸ்டில பாஸ்பண்ண வேணும். பிறகுதான் நீங்க கச்சேரியில விண்ணப்பிக்க வேணும். அதுக்குப் பிறகு நீங்க எழுத்துப் பரீட்சையில பாஸ்பண்ண வேணும்…” என்று ஆரம்பித்து, காந்தனுக்கு எல்லாமே விளக்கமாகச் சொல்லப்பட்டது. கட்ட வேண்டிய பணத்தைக் கட்டிவிட்டு, வெளியில் வந்த காந்தன், வரிசைக் கிரமமாக ஒவ்வொன்றையும் செய்ய ஆரம்பித்தான். ஒன்றைச் செய்ய ஆரம்பித்து விட்டால்அதில் ஒழுங்கு முறை இருக்க வேண்டும்.முதற் தடவையிலேயே பரீட்சையில் பாஸாகி விட வேண்டும் என்பதில் தீவிரம் கொண்டவன் காந்தன்… மருத்துவ பரிசோதனைக்குச் சென்றான். அங்கு காத்திருந்தவர்கள் தொகையை ஆச்சரியத்தோடு பார்த்தான். தினமும் இப்படி நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு வந்து போகின்றார்கள். இவர்கள் எல்லோருமே வாகனத்தோடு தெருக்களுக்கு வரப்போகின்றவர்கள்.
தெருக்கள் இவர்களை, இவர்களது வாகனங்களை எப்படித் தாக்குப் பிடிக்கப் போகின்றன என்ற மனதுள் நினைத்துக் கொண்டான். மருத்துவரின் சான்றிதழுடன் கச்சேரிக்குச் சென்று, பணங் கட்டி பதிந்து கொண்டான். தற்காலிக “எல்” அனுமதி கிடைத்தது. இந்த “எல்” 12 மாத காலத்தில் காலாவதியாகி விடும். மூன்று மாதங்கள் கழித்து, பயிற்றுவிக்கும் நிலையத்தில் பதிந்து, அவர்கள் தரும் பயிற்சிiயைத் தொடங்க வேண்டும். அதற்கிடையில் வீதி ஒழுங்கு முறைகள் பற்றி எழுத்துப் பரீட்சை… தரப்பட்ட புத்தகத்தை ஒழுங்காகப் படித்தான். பயிற்சிநிலையம் நடாத்திய சில வகுப்புகளுக்கும் தவறாது சமூகமளித்தான். பரீட்சை எழுதினான். முயற்சி அவம் போகவில்லை. எழுதிய அன்றே பரீட்சை முடிவை அறிவித்தார்கள். அவனுக்கு சித்தி… முதலாவது தடை தாண்டியாயிற்று… அடுத்து அவன் முகம் கொடுத்த பிரச்சினை…
ஒரு ஸ்கூட்டர் புதிதாக வாங்குவதா? வாங்குவதாயின் எப்பொழுது வாங்குவது?
“உதுக்கென்ன அவசரம்? இரண்டு இலட்சம் ரூபாயைக் கொண்டு போய் இரும்பில முடக்கப் போறியளோ?”
இப்படிக் கேட்டது அவன் மனைவி. அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. முன்பு வாசித்த பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் என்ற நாவலின் கதை மனதுள் வந்து போயிற்று. இரும்பில காசை முடக்கவோ என்று மனைவி கேட்டதால்தான், வாகனங்களை இரும்புக் குதிரைகள் என்று தன் நாவலில் பாலகுமாரன் வர்ணித்த ஞாபகம் மனதுள் வந்து போயிற்று.
“எல்லாத்தையும் தங்கத்தில முடக்கேலுமோ? நாங்க பாவிக்கிற பிரிட்ஜ்,மிக்ஸர்,வாஷிங் மெஷின், ஓடுற சைக்கிள் எண்டு பல இரும்புகளில காசை முடக்கித்தானே இருக்கிறம். தேவையெண்டு வரேக்கிள இரும்பு,தங்கமெண்டு பார்க்கேலுமே”
அடுத்த தினம் தனது புதிய இரும்புக் குதிரையை வாங்க முடிவெடுத்து விட்டான். தனக்கு வாகனங்கள் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால்அடிக்கடி ஓட்டோவைக் கொண்டு வரும் நண்பரின் உதவியை நாடினான். அவனுக்குப் பிடித்த நிறத்தில், ஒரு புத்தம் புதிய நீல ஸ்கூட்டர் வீடு தேடி வந்தது. புதிதாக ஓர் ஆடை அணிவது,புதிய கமரா வாங்குவது,என்று புதிதாக எதையாவது வாங்கி விட்டால்,அதை உபயோகிக்கும்போதுமனம் பெரிதாக குதூகலிக்கும். இது அற்ப சந்தோஷம் என்றாலும்புதிய ஒன்றைக் கையாளும்போது கிடைக்கும் சுகம் ஒரு தனிச் சுகந்தான்
தூர இடங்களுக்கு வாகனத்தை ஓட்ட முடியாவிட்டாலும் , வாகனங்களை மாலை நேரங்களில் எடுத்துக் கொண்டு பக்கத்து ஒழுங்கைகள் எல்லாம் சுற்றி வர ஆரம்பித்தான் காந்தன். ஒரு நாள் ஒரு நண்பன் தந்த மனத் துணிவோடு,நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டான். யாழ் நகர்ப்புறத்தில் அங்கும் இங்குமாக ஓடிய வாகனங்கள் அவனைக் கிலி கொள்ளச் செய்தன. எப்பொழுதும் கை பிரேக்கை அழுத்திக் கொண்டே இருந்தது. சுற்று வளைவுகளில் ஓடச் சிரமப்பட்டான். ஆனால் நண்பன் கொடுத்த உற்சாகம்மனதுள் இருந்த பயத்தைப் போக்கியது. அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆட வேண்டும் என்பார்கள். இங்கே அம்பலத்தில் ஆடினால்தானே பயிற்சி கிடைக்கின்றது? பிரதான தெருக்களில் மெல்ல மெல்ல ஒட ஆரம்பித்தான்;. புது அனுபவம்-ஆனால் அவசியப்பட்ட அனுபவமாக அது இருந்தது. 3 மாதங்கள் ஓடிவிட்டன. இனி பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிகள் ஆரம்பம்
எட்டுப் போட பழகுவது முக்கியம் என்றார்கள். எழரைச் சனி என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த ராசிப்படி ஏழரைச் சனி உள்ளவர்கள் பல இடர்களைச் சந்திப்பார்கள் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 30 வருடங்களக்கு ஒரு முறை வரும் இந்த ஏழரைச் சனி,சம்பந்தப்பட்டவரை ஆட்டி அலைக்கழிக்குமாம். இதை விட எட்டில சனி மிக மோசமானது என்று காந்தன் நினைத்தான். அதென்ன புதிதாக எட்டில சனி? ஸ்கூட்டர் ஓடப் பழுகுபவர்கள் முதலில் கற்க வேண்டியது எட்டுப் போடுவதுதான். காந்தனோடு பயிற்சிக்கு வந்த பல இளம் பெண்கள் இலகுவாக எட்டுப் போட்டார்கள். ஏனோ தெரியவில்லை. காந்தனை இந்தப் பயிற்சி புரட்டியெடுத்தது. நன்றாகக் குழப்பியது.
என்றாலும் தரையில்; கால் ஊன்றாமல் எட்டடிக்க முடியவில்லை. ஒரு நிமிடம் ஓடிவிட்டால், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றது. சுலபமாக எட்டடிக்க முடிகின்றது. ஆனால் முதல் நிமிடந்தானே முக்கியமானது. பரிசோதகர் இரண்டு தடவைகள் எட்டுப் போட்டால், தலையாட்டி விடுவாராம். அப்படியானால் முதல் ஒரு நிமிடத்தில் செய்வதுதானே முக்கியமானது. இவனோடு வந்த ஒரு நண்பன் வேடிக்கையாக ஒரு கேள்வியைக் கேட்டான்
“காந்தனுக்கு எட்டில சனியோ..? ”
வேடிக்கையாகத்தான் நண்பன் கேட்டான். ஆனால் அவன் மனம் வலித்தது. அட அப்படியும் இருக்குமோ என்று காந்தன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். என்னால் என்றுமே எட்டுப் போட முடியாமல் போய்விடுமோ? அவனுக்குள் சந்தேகம் பலமாக முளைவிடலாயிற்று. இந்தத் தடவை பெயிலாகி, மீண்டும் விண்ணப்பிக்கும் நிலை வரப்போகின்றதோ என்று பயந்தான் அவன்.
புது ஸ்கூட்டரையும் வாங்கி விட்டான். லைசென்ஸ் கிடைக்காவிட்டால் டபுள் ஏற்ற முடியாது. வெளியிடங்களுக்குப் போக முடியாது. வாங்கியதன் நோக்கமே பிழைத்து விடும். மனைவியின் முணுமுணுப்பு போல, இரும்புக்குதிரைக்கு வீணாக சில இலட்சங்களை வாரியிறைத்த நிலைதான் வரும். ஒரு நாள் தனக்குப் பயிற்சி தருபவரை தனிமையில் அணுகினான்.
“ இந்த எட்டு அவசியந்தானா? „
“ ஆமாம். நீங்கள் வாகனத்தை வளைவுகளில் இலாவகமாகத் திருப்பும் பயிற்சி இந்த எட்டடிப்பு மூலந்தான் சாத்தியமாகின்றது.. சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதன் காரணமே உங்கள் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை நீங்கள் இழப்பதுதான். எனவே ஒழுங்கான பயிற்சி நீங்கள் விபத்துக்கு உள்ளாவதைத் தவிர்க்கின்றது. ” என்றார் பயிற்றுநர்.
ஏன் இப்படி ஒரு முட்டாள் கேள்வியைக் கேட்டோம் என்று அவனுக்கு வெட்கமாக இருந்தது. குதிரை ஓடுவதாக இருந்தாலும், கடிவாளத்தைக் கையில் எடுத்தாக வேண்டும். குதிரையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கடிவாளம் அவசியம்.வாகனத்தைத் திருப்புவது, நிறுத்துவது,வேகத்தைக் குறைப்பது போன்ற சங்கதிகள் என் கையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால்தானே சாத்தியப்படும் என்று அவன் அப்பொழுது நினைத்துக் கொண்டான்.
சாலை விதிமுறைகளை மீறுவதால்தான் இவை சம்பவிக்கின்றன என்று குறைப்பட்டுக் கொண்டவன் இவன். ஒவ்வொருவரும் ஒழுங்காகக் கற்றால்தானே இனிவரும் காலங்களில் விபத்துக்களை குறைக்க வழிவகுக்கும் என்ற எண்ணம் ஏன் எனக்குத் தோன்றவில்லை என்று காந்தன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். எட்டில சனி என்பது, முரண்டு பிடிக்கும் மனதின் மாறாட்ட நிலையேதவிர வேறொன்றும் இல்லை என்று அந்தக் கணம் காந்தன் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டான். நம்மை மீ|றியது என்று எதுவும் இல்லை. ஒழுங்கான அணுகுமுறை நிச்சயம் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அவன் மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டான்.
தனது ஸ்கூட்டரை நிறுத்திய இடத்திற்கு வந்தபோது , பிரதான வீதியின் பக்கம் அவன் கண்கள் ஓடின. நல்ல வேகத்தில் ஒரு ஸ்கூட்டரில் வந்த பெண், தன் ஸ்கூட்டரை ஒரு வளைவில் ஒழுங்காகத் திருப்ப முயன்று, அதில் தோற்று , முன்னால் வந்த ஓட்டோவொன்றுடன் படாரென்று மோதியதை அவன் கண்டான். அவனை அதிர்ச்சி ஆட்கொண்டது. அந்த இளம் பெண் ஸ்கூட்டரோடு சரிந்து விழுங் காட்சி அவனை அதிர வைத்தது. பக்கத்தில் சென்ற வாகனங்கள் திடீர் பிரேக் போட்டு, கிரீச் கிரீச்சென்று பலத்த சப்தங்களுடன் நிற்க முயல்வதும் தெரிந்தது. ஒரு கணம் எதையும் சிந்திக்க முடியாதவனாக, அந்த இடத்தில் சிலை போல் நின்றான் காந்தன். எட்டில சனி என்று அவன் வாய் அவனையறியாமல் முணுமுணுத்தது.
ajgswiss@gmail.com