இட்டது: ஏப்ரல் 4th, 2017, 6:44 am
by அ.இராமநாதன்

அப்பாவும் படிக்கல
அம்மாவும் படிக்கல
பள்ளிக்கூடம் பக்கமா
நாங்கூட ஒதுங்கல,
இன்னும் நாங்கூட ஒதுங்க...
-
பிள்ளையாச்சும் படிக்கட்டும்னு
பள்ளிக்கூடம் அனுப்பி வெச்சேன்
புத்தகப் பலகையோடு
தட்டையும் போட்டு வெச்சேன்
சோத்து தட்டையும் போட்டு வெச்சேன்
-
அறிவியல் கருவிங்க
அடுக்கி வைக்க அலமாரிங்க
அத்தனையும் இங்கிருக்க
ஆசிரியர் வகுப்பில் இல்லே,
நல்லாசிரியர் வகுப்பில் இல்லே...
-
மாதாந்திர கூட்டம் நாலு
பத்தலைனு பயிற்சி ஏழு
வாரமொரு கணக்கெடுப்பு
வாத்தியாரும் வீதியிலே...
பாடம் சொல்ல நேரமில்லை
பெற்றோரே தெரிஞ்சுக்கங்க
பையனை
நீங்களே
படிக்க வெச்சி அனுப்பிடுங்க
பள்ளிக்கு படிக்க வெச்சி அனுப்பிடுங்க
-
-------------------------
-நா.சுப்புலட்சுமி
கிழிக்கப்படவேண்டிய கறுப்புப் பக்கங்கள்-
கவிதை தொகுப்பிலிருந்து