இட்டது: மார்ச் 29th, 2017, 8:46 pm
by அ.இராமநாதன்
சவம் சென்ற சாலை…
சிதறிக் கிடந்த
பூக்களின்
முணுமுணுப்பை
எந்த கால்களும் கேட்கவில்லை…
யாரோ இறந்ததற்கு
எங்களை ஏன்
கொன்றீர்கள் என்பதை!

உங்களுக்கு மணமானாலும்
நீங்கள் பிணமானாலும்
நோயானாலும், குணமானாலும்
ரணமாவது நாங்கள் தான்!

பாலியல்
தொழிலாளியின்
தலையில்
அழகாகிறோம்!

அரசியல்வாதியின்
கழுத்தில்
அழுக்காகிறோம்!

எங்கள் வர்ணங்கள்
வேறு என்றாலும் அதில்
ஜாதி கிடையாது
எங்கள் நறுமணம்
நூறு என்றாலும் அதில்
போலி கிடையாது!

எங்களை மதிக்காமல்
மிதிப்பவர்களே…
நீங்கள் இறந்தால் மீண்டும்
பிறப்பதில்லை!

நாங்கள் உதிர்வதே
மலர்வதற்குத்தான்!

—————————
— நிஷாத் பானு, சென்னை.

வாரமலர்