இட்டது: மார்ச் 29th, 2017, 8:01 pm
by அ.இராமநாதன்
குப்பையில் முளைத்தெழும்
குன்றிமணியாய் இரு…
தகரத்தை அல்ல
தங்கத்தை எடை போட
பிறந்தவன் நீ!

குடத்தினுள் முடங்கிக் கிடக்காமல்
குன்றின் விளக்காய் இரு…
உன்னடி இருட்டெனும் போதும்
உலகுக்கே
ஒளி தர பிறந்தவன் நீ!

ஓய்வின்றி ஓடி
முடிவில்
கடலில் கலக்கும்
ஆறாய் இரு…
செல்லும் வழியெல்லாம்
வளமாக்கப் பிறந்தவன் நீ!

காற்றினிலே கரைந்து போகும்
கற்பூரமாய் இரு…
ஆலய வழிபாட்டின் அம்சம் நீ!

எச்சமாய் விழுந்தாலும்
பூமியை துளைத்தெழும்
விதையாய் விழு…
எதிர்கால விருட்சம் நீ!

ஒருநாள் பொழுதில்
வாழ்ந்து, சருகாகி
வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும்
மலராய் இரு…
வாழும் போதே
மலர்ந்து மணம் வீசி
உயிர் காக்கும் மருந்தாய் நீ!

ஊடும், பாவுமாய்
அடி வாங்கி – பின்
எத்தனையோ முறை
அடித்து, துவைத்து, பிழிந்தாலும்
நைந்து போகும் வரை உழைக்கும்
துணியாய் இரு…
மானம் காக்க பிறந்தவன் நீ!

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
என்பதற்கேற்ப இப்போதே
கண் தானம், உயிர் தானம் செய்திடு
காலம் கடந்த பின்னும் உயிர் வாழ…
உலகம் பார்க்கப் பிறந்தவன் நீ!
-
----------------------------------
— எஸ்.செல்வம்,
அருப்புக்கோட்டை.
நன்றி - வாரமலர்