இட்டது: மே 20th, 2017, 8:43 am
by A.J.Gnanenthiran
போலி வாழைப்பழங்களில் போதைவஸ்துக்கள்

இன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.
குறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது ?
ஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .
கடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .
2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,
சென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .
கொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .

எமன் வடிவில் எபோலா

எபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ? விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .
இந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .
அன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .
கொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .
.
நாட்டின் நடுவே (மெகா) நகரம்
நீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .
புதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .

போக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்
Jing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .
கடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .
2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..
எடு தடி என் பெண்டாட்டிகாக!

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.

ஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .
தென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .
தங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .
இவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான்! ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் !
தங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .
டொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .
உலகம் விசித்திரமானதுதான் !
20.05
ஏ.ஜே.ஞானேந்திரன்