இட்டது: மே 18th, 2017, 2:20 pm
by A.J.Gnanenthiran
அரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.
அம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .
சரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .
இந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.
அந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமா?தாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.
“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..
இது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .
இது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா ? பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா ?
உலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .
முதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .
இரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு

வருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..

நான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.
இதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .உலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .
மனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .

ஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .
கல்விக்கு கரை ஏது ?
நம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா?
இன்றே செல்வோம் நன்றே கற்போம்
ஏ.ஜே .ஞானேந்திரன்
18.05.17