இட்டது: பிப்ரவரி 19th, 2016, 9:05 pm
by வேட்டையன்
Image

தற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.

சீனா நிறுவனமான Adcom-காமிடமிருந்து இந்த செல்பேசியை ரிங்க்பெல் தருவித்து Make In India என்ற திட்டத்தின் மூலமாகத் தாங்கள் தயாரித்து விற்பதாக இந்நிறுவனம் சொல்லிக்கொள்கிறது. அதாவது 2500 ரூபாய் மதிப்புள்ள Adcom நிறுவன செல்பேசியை வெறும் 251 ரூபாய்க்கு ரிங்க்பெல் விற்கிறது. இவ்வாறு விற்கவேண்டிய காரணம் என்ன?

இங்கு தான் தங்கள் நிறுவன பெயரைச் சந்தைபடுத்தும் உத்தியை இந்நிறுவனம் மேற்க்கொண்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல இந்திய செல்பேசி நிறுவனங்களான மைக்ரோமாக்சு(MicroMax), லெமன்(Lemon), ஏர்போன்(AirPhone), ஒனிட(Onida), லாவ(Lava), கார்பன்(Karbonn) போன்றவை தங்களை பற்றியும் தங்களது தயாரிப்புகள் பற்றியும் இந்திய நுகர்வோர்களிடம் சந்தைபடுத்தும் பொருட்டு சுமார் 50 - 100 கோடி ரூபாய்களை தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு பேட்டிகளில் செலவிட்டுள்ளன. சுமார் 2500 விலை மதிப்புடைய செல்பேசியை ரூபாய் 251 விற்கும்போது ரிங்க்பெல் நிறுவனத்திற்கு சுமார் 2249 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த நட்டம் மற்ற நிறுவனங்களைப் போல விளம்பரதிற்க்காகச் செலவிடும் தொகையைவிட மிகக் குறைவானதாகும்.


எப்படி?

அதாவது 22 கோடி ரூபாயை இந்நிறுவனம் தங்களை இந்தியாவில் சந்தைபடுத்த விளம்பர தொகையாகச் செலவு செய்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்தத் தொகை 50-60% குறைவு. எந்த ஒரு நிறுவனங்களும் விளம்பரத்திற்கு செலவிடும் தொகையை நட்ட கணக்கில் சேர்ப்பதில்லை, இவற்றைத் தொழிலை மேம்படுத்தும் ஒரு முதலீடாகவே எடுத்துக்கொள்கிறது. ரிங்க்பெல் நிறுவனமும் அப்படியே தான். இப்போதைக்கு அவர்களுக்கு இலாபம் முக்கியமல்ல, தங்கள் நிறுவனத்தின் பெயரும், அவர்கள் தாரிப்புகள் பற்றிய பேச்சு நாட்டின் மூலைமுடுக்கு வரை ஒலிக்க வேண்டும் என்பதே. இவர்கள் திட்டமிட்டபடியே இன்று இந்தியாவில் அவர்களை பற்றிப் பேசாதவர்கள் எவருமில்லை எனலாம். இவர்களின் தயாரிப்புபற்றி நல்ல ஒரு விளம்பரம் வெறும் 22 கோடிகளில் கிடைத்துள்ளது என நினைக்கும்போது, உண்மையில் இது சரியான ஒரு வியாபார உத்தி எனலாம். இந்த 22 கோடி முதலீடு இனிவரும் காலங்களில் இவர்கள் தயாரித்து விற்பதாகச் சொல்லிகொள்ளும் செல்பேசிகளை நல்ல விலையில் விற்க ஒரு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது.