இட்டது: ஏப்ரல் 1st, 2017, 10:02 pm
by அ.இராமநாதன்

----
தேனி:
'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த
ஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,
பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
வேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்
போலீஸ்காரராக இருந்தார்.

கடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா
இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

கின்னஸ் சாதனை :
இவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்
10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ
3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்
உண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'
போட்டுக் கொண்டார்.

குமுறல் :
ஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.
தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.
ஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என
பேட்டி அளித்தார்.

கட்டாய ஓய்வு :
இதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்
இருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது
போலீசார் தடுத்தனர்.

நேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து
பாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து
போலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி
பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்
பட்டுள்ளது.

வேல்முருகன் கூறியதாவது:
நான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது
பலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை
எடுக்க வில்லை? தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;
மக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை
விட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.

இதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை
எடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்
வைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.
தினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்
கொள்வேன். இவ்வாறு கூறினார்.--
-
-------------------------------------
தினமலர்